காம்பினை வென்றமென் பாடல் வரிகள் (kampinai venramen) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாரையூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநாரையூர்
சுவாமி : சௌந்தரநாதர்
அம்பாள் : திரிபுரசுந்தரியம்மை

காம்பினை வென்றமென்

காம்பினை வென்றமென் தோளிபாகங்
கலந்தான் நலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவில்
திருநாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடையான்
புலியின் னுரிதோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன்
பாதம் பணிவோமே. 1

தீவினை யாயின தீர்க்கநின்றான்
திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடியான்
புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு
கந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே
பரவா எழுவோமே. 2

மாயவன் சேயவன் வெள்ளியவன்
விடஞ்சேரும் மைமிடற்றன்
ஆயவ னாகியொ ரந்தரமும்
மவனென்று வரையாகம்
தீயவன் நீரவன் பூமியவன்
திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர்மேல்
வினையா யினவீடுமே. 3

துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல்
துளங்கும் உடம்பினராய்
அஞ்சுட ரார்எரி யாடுவர்
ஆரழ லார்விழிக்கண்
நஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர்
நலனோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க்
கினியில்லை யேதமே. 4

பொங்கிளங் கொன்றையி னார்கடலில்
விடமுண் டிமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற
தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தனல் ஆடலினார்
திருநாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணியவல்லார்
அவரே விழுமியரே. 5

பாருறு வாய்மையி னார்பரவும்
பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடை யான்மலையின்
தலைவன் மலைமகளைச்
சீருறு மாமறு கிற்சிறைவண்
டறையுந் திருநாரை
ஊருறை யெம்மிறை வர்க்கிவையொன்
றோடொன் றொவ்வாவே. 6

கள்ளி யிடுதலை யேந்துகையர்
கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேன்
மிளிரா டரவார்த்து
நள்ளிருள் நட்டம தாடுவர்நல்
நலன்ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்திலெம் மேல்வரு
வல்வினை யாயின வோடுமே. 7

நாமமெ னப்பல வும்முடையான்
நலன்ஓங்கு நாரையூர்
தாமொம் மெனப்பறை யாழ்குழறா
ளார்க ழல்பயில
ஈமவி ளக்கெரி சூழ்சுடலை
யியம்பும் மிடுகாட்டிற்
சாமம் உரைக்கநின் றாடுவானுந்
தழலாய சங்கரனே. 8

ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான்
ஒளிர்புன்ச டைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான்
வரிவண் டியாழ்முரலத்
தேனுடை மாமல ரன்னம்வைகுந்
திருநாரை யூர்மேய
ஆனிடை யைந்துகந் தான்
அடியே பரவா அடைவோமே. 9

தூசு புனைதுவ ராடைமேவு
தொழிலா ருடம்பினிலுள்
மாசு புனைந்துடை நீத்தவர்கள்
மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின்
திருநாரை யூர்தன்னில்
பூசு பொடித்தலை வர்அடியார்
அடியே பொருத்தமே. 10

தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யான்உறையுந்
திருநாரை யூர்தன்மேல்
பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும்
பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர்
வானோர் எதிர்கொளவே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment