கழுதை குங்குமந் தான்சுமந் பாடல் வரிகள் (kalutai kunkuman tancuman) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்கழுதை குங்குமந் தான்சுமந்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நான்உழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 1

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 2

புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 3

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீயெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 4

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 5

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 6

கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றஞ் செற்றம் இவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 7

ஐவ கையர் அரையரவ ராகி
ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
அவ்வ கையவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி ஒழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேயெரி யாடீ
எவ்வ கையெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 8

ஏழை மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் கும்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 9

அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment