கல்லூர்ப் பெருமணம் பாடல் வரிகள் (kallurp perumanam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநல்லூர்ப்பெருமணம் – ஆச்சாள்புரம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநல்லூர்ப்பெருமணம் – ஆச்சாள்புரம்
சுவாமி : சிவலோகத்தியாகேசர்
அம்பாள் : நங்கையுமைநாயகியம்மை
கல்லூர்ப் பெருமணம்
கல்லூர்ப் பெருமணம்
வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம்
பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ்
சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண
மேயநம் பானே. 1
தருமண லோதஞ்சேர்
தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு
பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி
மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர்
பாகங்கொண் டானே. 2
அன்புறு சிந்தைய
ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப்
பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை
இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர்
தொண்டுசெய் வாரே. 3
வல்லியந் தோலுடை
யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத்
துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு
நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம்
புண்ணிய னார்க்கே. 4
ஏறுகந் தீரிடு
காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை
யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு
நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை
கூறுகந் தீரே. 5
சிட்டப்பட் டார்க்கெளி
யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி
யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா
நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தி
ராலெம்பி ரானீரே. 6
மேகத்த கண்டன்எண்
தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித்
தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப்
பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை
யேபுரிந் தானே. 7
தக்கிருந் தீரன்று
தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க
உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று
நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப்
போக்கரு ளீரே. 8
ஏலுந்தண் டாமரை
யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி
கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர்
நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில்
புரிசடை யார்க்கே. 9
ஆதர் அமணொடு
சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப்
பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப்
பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ
வீடெளி தாமே. 10
நறும்பொழிற் காழியுள்
ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப்
பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன
வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம்
அவலம் இலரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்