Idarinum Thalarinum Pradosham Sivan Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் இடரினும் தளரினும் – ப்ரதோஷம் பாடல் (காந்தார பஞ்சமம்) காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Idarinum Thalarinum Kolaru Pathigam – Gandhara Panchamam meaning

இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

வாழினும் சாவினும் வருந்தினும்போய்

வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்

போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?

நனவினும் கனவினும் நம்பாஉன்னை

மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த

கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில், அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்

அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்

கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்

மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

கையது வீழினும் கழிவுறினும்

செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்

கொய்யணி நறுமலர் குலாயசென்னி

மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்

எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா

ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த

சந்தவெண் பொடியணி சங்கரனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ. ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா

ஒப்புடை ஒருவனை உருவழிய

அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்

சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்

ஏருடை மணிமுடி யிராவணனை

ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்

ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்

கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்

அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்

அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்

புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்

பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த

இலைநுனை வேற்படை யெம்இறையை

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன

விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்

நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

பொருள் / விளக்கம் :

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.

இந்த | idarinum thalarinum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song இடரினும் தளரினும் – ப்ரதோஷம் பாடல் (காந்தார பஞ்சமம்) போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment