Thursday, November 13, 2025
HomeSivan Songsஎன்ன புண்ணியஞ் பாடல் வரிகள் | enna punniyan Thevaram song lyrics in tamil

என்ன புண்ணியஞ் பாடல் வரிகள் | enna punniyan Thevaram song lyrics in tamil

என்ன புண்ணியஞ் பாடல் வரிகள் (enna punniyan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவலஞ்சுழி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவலஞ்சுழி
சுவாமி : கற்பகநாதேஸ்வரர்
அம்பாள் : பெரிய நாயகி

என்ன புண்ணியஞ்

என்ன புண்ணியஞ் செய்தனை
நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப்
பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு
வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும்
பாடியும் வழிபடும் அதனாலே. 1

விண்டொ ழிந்தன நம்முடை
வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத்
தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வார்குழல் மங்கையொர்
பங்கனை வலஞ்சுழி யிடமாகக்
கொண்டநாதன்மெய்த் தொழில்புரி
தொண்டரோ டினிதிருந்தமையாலே. 2

திருந்த லார்புரந் தீயெழச்
செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில்
வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர
மாவன வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ
ரேத்திய இணையடித் தலந்தானே. 3

கறைகொள் கண்டத்தர் காய்கதிர்
நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி
லிருந்துகந் தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல்
வலஞ்சுழி யிடம்மகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின்
றாடிய அற்புதம் அறியோமே. 4

மண்ணர் நீரர்விண் காற்றின
ராற்றலாம் எரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரு
வடிவினர் பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி
பிரிகிலார் பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல
இயம்புவர் இணையடி தொழுவாரே. 5

ஒருவ ராலுவ மிப்பதை
யரியதோர் மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல
பூதமும் பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை
கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி
யடிகளே வரிவளை கவர்ந்தாரே. 6

குன்றி யூர்குட மூக்கிடம்
வலம்புரங் குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும்
இயம்புவர் இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன
அறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட
லாமென்று சேயிழை தளர்வாமே. 7

குயிலின் நேர்மொழிக் கொடியிடை
வெருவுறக் குலவரைப் பாற்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன்
கதிர்முடி தோளிரு பதுமூன்றி
மயிலின் நேரன சாயலோ
டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி
காண்பவர் அல்லவர் காணாரே. 8

அழல தோம்பிய அலர்மிசை
அண்ணலும் அரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி
தாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு
வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை
யதனொடு துன்பங்கள் களைவாரே. 9

அறிவி லாதவன் சமணர்கள்
சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர்
மற்றவை தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி
வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி
பேசிடில் அளவறுப் பொண்ணாதே. 10

மாதொர் கூறனை வலஞ்சுழி
மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம்
பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல்
லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும்
இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments