எங்கே என்னை இருந்திடம் பாடல் வரிகள் (enke ennai iruntitam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாய்மூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாய்மூர்
சுவாமி : வாய்மூர் நாதர்
அம்பாள் : பாலின் நன்மொழியாள்
எங்கே என்னை இருந்திடம்
எங்கே என்னை
இருந்திடம் தேடிக்கொண்டு
அங்கே வந்துஅடை
யாளம் அருளினார்
தெங்கே தோன்றும்
திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று
போனார் அதுஎன்கொலோ. 1
மன்னு மாமறைக்
காட்டு மணாளனார்
உன்னி உன்னி
உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த்
தலைவன் ஆமா சொல்லி
என்னை வாஎன்று
போனார்அது என்கொலோ. 2
தஞ்சே கண்டேன்
தரிக்கிலா தார்என்றேன்
அஞ்சேல் உன்னை
அழைக்கவந் தேன்என்றார்
உஞ்சேன் என்றுகந்
தேஎழுந்து ஒட்டந்தேன்
வஞ்சே வல்லரே
வாய்மூர் அடிகளே. 3
கழியக் கண்டிலேன்
கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலேன்
ஒக்கவே ஓட்டந்தேன்
வழியிற் கண்டிலேன்
வாய்மூர் அடிகள்தம்
சுழியிற் பட்டுச்
சுழல்கின்றது என்கொலோ. 4
ஒள்ளி யார்இவர்
அன்றிமற்று இல்லைஎன்று
உள்கி உள்கி
உகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யார்இவர்
போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர்
போலக் கரந்ததே. 5
யாதே செய்துமி
யாமலோநீ யென்னில்
ஆதே யேயும்
அளவில் பெருமையான்
மாதே வாகிய
வாய்மூர் மருவினார்
போதே என்றும்
புகுந்ததும் பொய்கொலோ. 6
பாடிப் பெற்ற
பரிசில் பழங்காசு
வாடி வாட்டம்
தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு
திருவாய்மூர்க் கேஎனா
ஓடிப் போந்திங்கு
ஒளித்தவாறு என்கொலோ. 7
திறக்கப் பாடிய
என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி
அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ
தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார்
இவர் பித்தரே. 8
தனக்கே றாமை
தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள்
செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர்
வாய்மூர்க் கேஎனாப்
புனற்கே பொற்கோயில்
புக்கதும் பொய்கொலோ. 9
தீண்டற் கரிய
திருவடி ஒன்றினால்
மீண்டற் கும்மிதித்
தார்அரக் கன்தனை
வேண்டிக் கொண் டேன்திரு
வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நான்
என்றலும் தோன்றுமே.
திருச்சிற்றம்பலம்