சூலப் படையானைச் பாடல் வரிகள் (culap pataiyanaic) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

சூலப் படையானைச்

சூலப் படையானைச்
சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர்
குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள்
பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை
நான்கண்ட தாரூரே. 1

பக்கமே பாரிடங்கள்
சூழப் படுதலையிற்
புக்கவூர்ப் பிச்சையேற்
றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல்
கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை
நான்கண்ட தாரூரே. 2

சேய உலகமுஞ்
செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை
மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம்
மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத் திடையானை
நான்கண்ட தாரூரே. 3

ஏறேற்ற மாவேறி
எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ்
சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய்
நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை
நான்கண்ட தாரூரே. 4

தாங்கோல வெள்ளெலும்பு
பூண்டுதம் ஏறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ்
செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந்
திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து
போகா திருந்தாரே. 5

எம்பட்டம் பட்ட
முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த
நுதலானை அந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச்
சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை
நான்கண்ட தாரூரே. 6

போழொத்த வெண்மதியஞ்
சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான்
வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை
ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை
நான்கண்ட தாரூரே. 7

வஞ்சனையா ரார்பாடுஞ்
சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல்
உகந்தானைத் தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும்
பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை
நான்கண்ட தாரூரே. 8

காரமுது கொன்றை
கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ
டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள்
உய்யப் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை
நான்கண்ட தாரூரே. 9

தாட வுடுக்கையன்
தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன்
கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால்
அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை
நான்கண்ட தாரூரே. 10

மஞ்சாடு குன்றடர
வூன்றி மணிவிரலாற்
றுஞ்சாப்போர் வாளரக்கன்
றோள்நெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத்
தன்மார்பில் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை
நான்கண்ட தாரூரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment