சொன்மாலை பயில்கின்ற பாடல் வரிகள் (conmalai payilkinra) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழனம்
சுவாமி : ஆபத்சகாயர்
அம்பாள் : பெரியநாயகியம்மை

சொன்மாலை பயில்கின்ற

சொன்மாலை பயில்கின்ற
குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு
பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள்
முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என்
புதுநலமுண் டிகழ்வானோ. 1

கண்டகங்காள் முண்டகங்காள்
கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான்
பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி
மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான்
குறிக்கொள்ளா தொழிவானோ. 2

மனைக்காஞ்சி* இளங்குருகே
மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான்
பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம்
உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள்
சொற்றூதாய்ச் சோர்வாளோ.

* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம். 3

புதியையாய் இனியையாம்
பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று
பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை
மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல்
விளையாடல் விடுத்தானோ. 4

மண்பொருந்தி வாழ்பவர்க்கும்
மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும்
வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும்
பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங்
கைவிடநான் கடவேனோ. 5

பொங்கோத மால்கடலிற்
புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய்
செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான்
அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத்
தாரருளா தொழிவானோ. 6

துணையார முயங்கிப்போய்த்
துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான்
பாட்டோ வாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற்
கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என்
எழில்நலமுண் டிகழ்வானோ. 7

கூவைவாய்* மணிவரன்றிக்
கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப்
பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன்
கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள்
போகாத பொழுதுளதே.

*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் பொருந்திய முத்துக்கள் – அவையாவன – யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல்,
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு முத்துக்களாம்.

**காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து எனக்கொள்க. அவை – சங்கு, இப்பி, மீன், தாமரை மலர் என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை
சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த எனத் திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 2-வது பதிகம் 5-வது திருப்பாடலானு முணர்க. 8

புள்ளிமான் பொறியரவம்
புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த
இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும்
என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென்
கனவளையுங் கடவேனோ. 9

வஞ்சித்தென் வளைகவர்ந்தான்
வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம்
பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய
அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற
சேவடியாய் கோடியையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment