சிந்தை வாய்தலு பாடல் வரிகள் (cintai vaytalu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

சிந்தை வாய்தலு

சிந்தை வாய்தலு
ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால்
வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர்
மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர்
பாம்பர்ஐ யாறரே. 1

பாக(ம்) மாலை
மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின்
ஈருரி போர்த்தவர்
கோக மாலை
குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ்
சாடும்ஐ யாறரே. 2

நெஞ்ச மென்பதோர்
நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர்
வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின்
நாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற
அருளும்ஐ யாறரே. 3

நினைக்கும் நெஞ்சினுள்
ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல்
வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத்
துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள்
ளாரும்ஐ யாறரே. 4

பரியர் நுண்ணியர்
பார்த்தற் கரியவர்
அரிய பாடலர்
ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர்
காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க்
கெளியர்ஐ யாறரே. 5

புலரும் போது
மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக
ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும்
இலாதது மன்றியும்
அலரும் போதும்
அணியும்ஐ யாறரே. 6

பங்க மாலைக்
குழலியோர் பால்நிறக்
கங்கை மாலையர்
காதன்மை செய்தவர்
மங்கை மாலை
மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ்
சூடும்ஐ யாறரே. 7

முன்னை யாறு
முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு
பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு
மருவிய மாதவன்
தன்னை யாறு
தொழத்தவ மாகுமே. 8

ஆனை யாறென
ஆடுகின் றான்முடி
வானை யாறு
வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக்
கேற்கவன் இன்னருள்
தேனை யாறு
திறந்தாலே யொக்குமே. 9

அரக்கின் மேனியன்
அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி
யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து
வாயும் அலறவே
அரக்கி னானடி
யாலும்ஐ யாறனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment