சேவுயருந் திண்கொடியான் பாடல் வரிகள் (cevuyarun tinkotiyan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

சேவுயருந் திண்கொடியான்

சேவுயருந் திண்கொடியான் திருவடியே
சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே. 1

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே. 2

அலங்கல்மலி வானவருந் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே. 3

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே. 4

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே. 5

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயுங் கழுமலமே. 6

புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
புள்ளிரியுங் கழுமலமே. 7

அடல்வந்த வானவரை யழித்துலகு
தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா
வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே. 8

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்றேத்துங் கழுமலமே. 9

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
மேல்படுக்குங் கழுமலமே. 10

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment