செடியேன் தீவினையிற் பாடல் வரிகள் (cetiyen tivinaiyir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருகழிப்பாலை – சிவபுரி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருகழிப்பாலை – சிவபுரிசெடியேன் தீவினையிற்

செடியேன் தீவினையிற்
றடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவவெனா
தொழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும்
அரவும் உடன்றுயிலும்
வடிவே தாமுடையார்
மகிழுங்கழிப் பாலையதே. 1

எங்கே னும்மிருந்துன்
அடியே னுனைநினைந்தால்
அங்கே வந்தென்னோடும்
உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை
அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயானே. 2

ஒறுத்தாய் நின்னருளில்
அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும்
நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிட
மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக்
கழிப்பாலை மேயானே. 3

சுரும்பார் விண்டமலர்
அவைதூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத்
தடியாரொடும் அன்புசெய்வன்
விரும்பேன் உன்னையல்லால்
ஒருதெய்வம் என்மனத்தாற்
கரும்பா ருங்கழனிக்
கழிப்பாலை மேயானே. 4

ஒழிப்பாய் என்வினையை
உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய்
விலையா வணமுடையாய்
கழிப்பால் கண்டடங்கச்
சுழியேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங்
கனலேந்து கையானே. 5

ஆர்த்தாய் ஆடரவை
அரையார் புலியதள்மேற்
போர்த்தாய் ஆனையின்றோல்
உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார்
வினைகள் அவைபோகப்
பார்த்தா னுக்கிடமாம்
பழியில்கழிப் பாலையதே. 6

பருத்தாள் வன்பகட்டைப்
படமாகமுன் பற்றியதள்
உரித்தாய் ஆனையின்றோல்
உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும்
இமையோர்கள் இடர்கடியுங்
கருத்தா தண்கழனிக்
கழிப்பாலை மேயானே. 7

படைத்தாய் ஞாலமெலாம்
படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை
உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன்
றலைபத்தொடு தோள்நெரியக்
கடற்சா ருங்கழனிக்
கழிப்பாலை மேயானே. 8

பொய்யா நாவதனாற்
புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும்
விளக்கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய
நிறத்தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடு
மகிழ்வான்கழிப் பாலையதே. 9

பழிசே ரில்புகழான்
பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்குங்
கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார்
வானோருல காள்பவரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment