செம்பொ னார்தரு வேங்கையும் பாடல் வரிகள் (cempo nartaru venkaiyum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமாந்துறை தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருமாந்துறை
சுவாமி : ஆம்ரவனேஸ்வரர்
அம்பாள் : அழகம்மை

செம்பொ னார்தரு வேங்கையும்

செம்பொ னார்தரு வேங்கையும்
ஞாழலுஞ் செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி
சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு
பைங்கழல் ஏத்துதல் செய்வோமே. 1

விளவு தேனொடு சாதியின்
பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக்
காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன்
பங்கனை யன்றிமற் றறியோமே. 2

கோடு தேன்சொரி குன்றிடைப்
பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி
கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல்
அல்லது கெழுமுதல் அறியோமே. 3

இலவ ஞாழலும் ஈஞ்சொடு
சுரபுன்னை இளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி
மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை
யல்லது வணங்குதல் அறியோமே. 4

கோங்கு செண்பகங் குருந்தொடு
பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந்
தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள்
நாவினில் தலைப்படுந் தவத்தோரே. 5

பெருகு சந்தனங் காரகில்
பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை
மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும்
மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு
மலரடி வணங்குதல் செய்வோமே. 6

நறவ மல்லிகை முல்லையும்
மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி
வடகரை மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச்
சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி
லெய்தவன் நிரைகழல் பணிவோமே. 7

மந்த மார்பொழில் மாங்கனி
மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல்
லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர்
சேர்வது தீநெறி யதுதானே. 8

நீல மாமணி நித்திலத்
தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி
வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங்
காண்கிலா மலரடி யிணைநாளும்
கோல மேத்திநின் றாடுமின்
பாடுமின் கூற்றுவன் நலியானே. 9

நின்று ணுஞ்சமண் தேரரும்
நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின்
பலங்களும் நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி
வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி
சழகிது அதுவவர்க் கிடமாமே. 10

வரைவ ளங்கவர் காவிரி
வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதியு டையவன்
கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன்
ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர்
அல்லலும் பாவமும் இலர்தாமே.

சுவாமி : ஆம்ரவனேஸ்வரர்; அம்பாள் : அழகம்மை. 11

Leave a Comment