சாதலும் பிறத்தலுந் பாடல் வரிகள் (catalum pirattalun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழிசாதலும் பிறத்தலுந்

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 1

மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 2

திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 3

மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 4

குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 5

வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 6

அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7

நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 8

மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 9

செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment