அறத்தா லுயிர்கா பாடல் வரிகள் (aratta luyirka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநெல்லிக்கா – திருநெல்லிக்காவல் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநெல்லிக்கா – திருநெல்லிக்காவல்
சுவாமி : நெல்லிவனேசுவரர்
அம்பாள் : மங்களநாயகியம்மை

அறத்தா லுயிர்கா

அறத்தா லுயிர்கா
வலமர்ந் தருளி
மறத்தால் மதில்மூன்
றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய்
தியதீவெண் டிங்கள்
நிறத்தான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 1

பதிதா னிடுகா
டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ
டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான்
விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 2

நலந்தா னவன்நான்
முகன்றன் தலையைக்
கலந்தா னதுகொண்
டகபா லியுந்தான்
புலந்தான் புகழா
லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 3

தலைதா னதுஏந்
தியதம் மடிகள்
கலைதான் திரிகா
டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான்
மதில்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 4

தவந்தான் கதிதான்
மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந்
தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய்
துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 5

வெறியார் மலர்க்கொன்
றையந்தார் விரும்பி
மறியார் மலைமங்
கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண்
டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 6

பிறைதான் சடைச்சேர்த்
தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக்
கயிலை மலையான்
மறைதான் புனலொண்
மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 7

மறைத்தான் பிணிமா
தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா
லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற்
குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 8

தழல்தா மரையான்
வையந்தா யவனும்
கழல்தான் முடிகா
ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க்
கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 9

கனத்தார் திரைமாண்
டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங்
கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக்
கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா
வுள்நிலா யவனே. 10

புகரே துமிலா
தபுத்தே ளுலகின்
நிகரா நெல்லிக்கா
வுள்நிலா யவனை
நகரானல ஞான
சம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா
வமிலா தவரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment