Sivan Songs

ஆராத இன்னமுதை பாடல் வரிகள் | arata innamutai Thevaram song lyrics in tamil

ஆராத இன்னமுதை பாடல் வரிகள் (arata innamutai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பள்ளியின்முக்கூடல் – அரியான்பள்ளி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : பள்ளியின்முக்கூடல் – அரியான்பள்ளிஆராத இன்னமுதை

ஆராத இன்னமுதை அம்மான் றன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 1

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 2

பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்
புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை
வேதியனை வெண்காடு மேயான் றன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 3

போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 4

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 5

கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனி கமலத் தோன்றன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6

நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் றோழனை நீடு ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 7

நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலத் தான மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்
குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 8

ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 9

தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்
குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment