Sivan Songs

ஆராரும் மூவிலைவேல் பாடல் வரிகள் | ararum muvilaivel Thevaram song lyrics in tamil

ஆராரும் மூவிலைவேல் பாடல் வரிகள் (ararum muvilaivel) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவோமாம்புலியூர் – ஓமாம்புலியூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவோமாம்புலியூர் – ஓமாம்புலியூர்ஆராரும் மூவிலைவேல்

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை
ஊராரும் படநாக மாட்டு வானை
உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 1

ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா
அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்
சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்
உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 2

வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்
சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 3

அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்
உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 4

பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்
பாராத வகைபண்ண வல்லான் றன்னை
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்
உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 5

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை
மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6

மலையானை வருமலையன் றுரிசெய் தானை
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்
புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 7

சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 9

வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று
மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment