அறையும் பூம்புன லோடும் பாடல் வரிகள் (araiyum pumpuna lotum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கொச்சைவயம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கொச்சைவயம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

அறையும் பூம்புன லோடும்

அறையும் பூம்புன லோடும்
ஆடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற்
பெண்ணொரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஓல்லொலி யோவா
மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழுங்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 1

சுண்ணத்தர் தோலொடு நூல்சேர்
மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக்
கங்குல்நின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி
யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த அந்தணர் வாழுங்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 2

பாலை யன்னவெண் ணீறு
பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீதம்
மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம்
வெண்திரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 3

கடிகொள் கூவிள மத்தங்
கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற்
புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின்
ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 4

ஆடன் மாமதி யுடையா
ராயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி
வையகம் இடுபலிக் குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை
அணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த
கொச்சை வயம்அமர்ந் தாரே. 5

மண்டு கங்கையும் அரவும்
மல்கிய வளர்சடை தன்மேல்
துண்ட வெண்பிறை யணிவர்
தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம்
வெவ்வழல் எரிகொள விடைமேல்
கொண்ட கோலம துடையார்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

அன்றவ் ஆல்நிழல் அமர்ந்து
அறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டில்
உண்பது பொருகடல் இலங்கை
வென்றி வேந்தனை யொல்க
வூன்றிய விரலினர் வான்தோய்
குன்ற மன்னபொன் மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 8

சீர்கொள் மாமல ரானுஞ்
செங்கண்மால் என்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகியெங்கும்
உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப்
பண்பினர் பால்மொழியோடுங்
கூர்கொள் வேல்வலன் ஏந்திக்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 9

குண்டர் வண்துவ ராடை
போர்த்ததொர் கொள்கையி னார்கள்
மிண்டர் பேசிய பேச்சு
மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும்
பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே. 10

கொந்த ணிபொழில் சூழ்ந்த
கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும்
அருமறை ஞான சம்பந்தன்
சந்த மார்ந்தழ காய
தண்தமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும்
புகவலர் முனைகெட வினையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment