அலர்மகள் மலிதர பாடல் வரிகள் (alarmakal malitara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

அலர்மகள் மலிதர

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே. 1

இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே. 2

கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே. 3

மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே. 4

புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 5

அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே. 6

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 7

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 8

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே. 9

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே. 10

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment