அலையார் கடல்நஞ்ச பாடல் வரிகள் (alaiyar katalnanca) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழனம்அலையார் கடல்நஞ்ச

அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 1

வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத் துவகை தருவார் தாமே
உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 2

இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே
அரவ மரையி லசைத்தார் தாமே
அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே
கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
பரவு மடியார்க்குப் பாங்கர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 3

மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே
என்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 4

சீரால் வணங்கப் படுவார் தாமே
திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா வமுதமு மானார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
நீரார் நியம முடையார் தாமே
நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 5

கால னுயிர்வௌவ வல்லார் தாமே
கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே
கோள்நாக நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 6

ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
ஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
தீவா யரவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 7

ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே
உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 8

நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே
பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 9

விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே
விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே
படையாப் பல்பூத முடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment