விண்ணவர் தொழுதெழு பாடல் வரிகள் (vinnavar tolutelu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெங்குரு – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவெங்குரு – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

விண்ணவர் தொழுதெழு

விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே. 1

வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே. 2

விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே. 3

விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்கள் துயர்பிணி யிலரே. 4

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே. 5

வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே. 6

விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழல்மல்கும் அங்கையி னீரே
அழல்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே. 7

வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே. 8

மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே. 9

விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே. 10

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment