விங்குவிளை கழனிமிகு பாடல் வரிகள் (vinkuvilai kalanimiku) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமாகறல் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருமாகறல்
சுவாமி : அடைக்கலங்காத்தநாதர்
அம்பாள் : புவனநாயகியம்மை

விங்குவிளை கழனிமிகு

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே. 1

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
யேத்தவினை யகலுமிகவே. 2

காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே. 3

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன
லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
பாடுநுக ராவெழுமினே. 4

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட
மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
யாரைநலி யாவினைகளே. 5

மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர்
வானுலகம் ஏறலெளிதே. 6

வெய்யவினை நெறிகள்செல வந்தணையும்
மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி
மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை
யாவினைகள் அகலுமிகவே. 7

தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை
நிற்றலில போகுமுடனே. 8

தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை
யாயினவும் அகல்வதெளிதே. 9

காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி
யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
யாரையடை யாவினைகளே. 10

கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
தொல்வினைகள் ஒல்குமுடனே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment