வெந்தவெண் ணீறணிந்து பாடல் வரிகள் (ventaven niranintu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கொடிமாடச்செங்குன்றூர் – திருச்செங்கோடு தலம் கொங்குநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : கொங்குநாடு
தலம் : திருக்கொடிமாடச்செங்குன்றூர் – திருச்செங்கோடு
சுவாமி : அர்த்தநாரீசுவரர்
அம்பாள் : அர்த்தநாரீசுவரி

வெந்தவெண் ணீறணிந்து

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்
திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள்
ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார்
அவலம் அறுப்பாரே. 1

அலைமலி தண்புனலோ டரவஞ்
சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான்
மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 2

பாலன நீறுபுனை திருமார்பிற்
பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள்
ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான்
கழலேத்தல் நீதியே. 3

வாருறு கொங்கைநல்ல மடவாள்
திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங்
கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான்
கழலேத்தல் நீதியே. 4

பொன்றிகழ் ஆமையொடு புரிநூல்
திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து
பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான்
கழலேத்தல் மெய்ப்பொருளே. 5

ஓங்கிய மூவிலைநற் சூல
மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு
மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார்
வினையாய பற்றறுமே. 6

நீடலர் கொன்றையொடு நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற்
பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார்
வினையாய தேயுமே. 7

மத்தநன் மாமலரும் மதியும்வளர்
கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல்
துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 8

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு
மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல்
ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார்
வினையாய நாசமே. 9

போதியர் பிண்டியரென் றிவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும்
வினையான வீடுமே. 10

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார்
புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார்
வினையான நாசமே.

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. திருச்செங்கோடு என வழங்குகின்றது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment