வேலி னேர்தரு பாடல் வரிகள் (veli nertaru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

வேலி னேர்தரு

வேலி னேர்தரு கண்ணி னாளுமை
பங்க னங்கணன் மிழலை மாநகர்
ஆல நீழலின் மேவி னானடிக்
கன்பர் துன்பிலரே. 1

விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை
ஒல்லை யாசறுமே. 2

விசையி னோடெழு பசையு நஞ்சினை
யசைவு செய்தவன் மிழலை மாநகர்
இசையு மீசனை நசையின் மேவினான்
மிசை செயாவினையே. 3

வென்றி சேர்கொடி மூடு மாமதில்
மிழலை மாநகர் மேவி நாடொறும்
நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர்
துன்ப மொன்றிலரே. 4

போத கந்தனை யுரிசெய் தோன்புயல்
நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர்
ஆத ரஞ்செய்த அடிகள் பாதம
லாலொர் பற்றிலமே. 5

தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி
தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்க னாரடி தொழுவர் மேல்வினை
நாடொ றுங்கெடுமே. 6

போர ணாவுமுப் புரமெ ரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரு மீசனைச் சிந்தை செய்பவர்
தீவி னைகெடுமே. 7

இரக்க மிஃறொழில் அரக்க னாருடல்
நெருக்கி னான்மிகு மிழலை யானடி
சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ்
பரக்கும் நீள்புவியே. 8

துன்று பூமகன் பன்றி யானவன்
ஒன்று மோர்கிலா மிழலை யானடி
சென்று பூம்புனல் நின்று தூவினார்
நன்று சேர்பவரே. 9

புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலை மாநகர்
சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள்
மெய்த்த வத்தவரே. 10

சந்த மார்பொழில் மிழலை யீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்த ராகுவரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment