வடிவுடை மழுவேந்தி பாடல் வரிகள் (vativutai maluventi) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கூடலையாற்றூர் – கூடலையாத்தூர் தலம் நடுநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : நடுநாடு
தலம் : திருக்கூடலையாற்றூர் – கூடலையாத்தூர்வடிவுடை மழுவேந்தி

வடிவுடை மழுவேந்தி
மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப்
புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக்
கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 1

வையகம் முழுதுண்ட
மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற்
பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக்
கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 2

ஊர்தொறும் வெண்டலைகொண்
டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள்
மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக்
கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 3

சந்தண வும்புனலுந்
தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள்
பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 4

வேதியர் விண்ணவரும்
மண்ணவ ருந்தொழநற்
சோதிய துருவாகிச்
சுரிகுழல் உமையோடும்
கோதிய வண்டறையுங்
கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 5

வித்தக வீணையொடும்
வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல்
மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 6

மழைநுழை மதியமொடு
வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகில்அல்குல்
ஏந்திழை யாளோடும்
குழையணி திகழ்சோலைக்
கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 7

மறைமுதல் வானவரும்
மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும்
பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங்
கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 8

வேலையின் நஞ்சுண்டு
விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள்
பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக்
கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே. 9

கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment