வரிவள ரவிரொளி பாடல் வரிகள் (varivala raviroli) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஇடைச்சுரம் – திருவடிசூலம் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : தொண்டைநாடு
தலம் : திருஇடைச்சுரம் – திருவடிசூலம்
சுவாமி : ஞானபுரீஸ்வரர்
அம்பாள் : கோபரத்னாம்பிகை

வரிவள ரவிரொளி

வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இளமயில் ஆல
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே 1

ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 2

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு1 வாளர்
வானமும் நிலமையும்2 இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.

பாடம் : 1 கனமழு 2நிலைமையும் 3

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோர் அரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 4

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 5

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையின் ஆடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 6

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கும் எரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 7

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம மேவிய இவர்வண மென்னே. 8

பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமும்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 9

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமைய ரடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயல்இள வாளைகள்இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 10

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரற்
புணர் மடநடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர்தாமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment