வரம தேகொளா பாடல் வரிகள் (varama tekola) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
வரம தேகொளா
வரம தேகொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்
தரன்நன் நாமமே பரவு வார்கள்சீர்
விரவு நீள்புவியே. 1
சேணு லாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ
ராணி யொத்தவரே. 2
அகல மார்தரைப் புகலும் நான்மறைக்
கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர்ப்
பகல்செய் வோனெதிர்ச் சகல சேகரன்
அகில நாயகனே. 3
துங்க மாகரி பங்க மாவடுஞ்
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத்
தங்கு மோவினையே. 4
காணி யொண்பொருட் கற்ற வர்க்கீகை
யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
றோணி வண்புரத் தாணி யென்பவர்
தூமதி யினரே. 5
ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
சேர்ந்தி ராவினையே. 6
சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன்
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர்
சித்தி பெற்றவரே. 7
உறவு மாகியற் றவர்க ளுக்குமா
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத்
தெறகி லாவினையே. 8
பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச்
சாதியா வினையே. 9
ஆழி யங்கையிற் கொண்ட மாலயன்
அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற்றவமே. 10
விச்சை யொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிச றுத்தவன்
கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர்
குணங்கள் கூறுமினே. 11
கழும லத்தினுட் கடவுள் பாதமே
கருது ஞானசம் பந்த னின்றமிழ்
முழுதும் வல்லவர்க் கின்ப மேதரும்
முக்கண் எம்மிறையே.
திருச்சிற்றம்பலம்