வண்டோங்கு செங்கமலங் பாடல் வரிகள் (vantonku cenkamalan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவொற்றியூர் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவொற்றியூர்வண்டோங்கு செங்கமலங்

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோகனார்
உண்டார்னஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய வொளிவண்ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுஞ்தொழிலுங் கைவிட்டவே. 1

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யிழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன்றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே. 2

வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஒதல் ஒவா
ஒளிதிகழும் ஒற்றியூர் ருடைய கோவே. 3

நரையார்ந்த விடையேறி நீறு பூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே. 4

மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகிநின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே. 5

கடிய விடையேறிக்காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடு வெண்டலையொள் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே. 6

வல்லாராய் வானவர்க் ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே. 7

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவே னேங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே. 8

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே. 9

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment