வைத்தனன் தனக்கே பாடல் வரிகள் (vaittanan tanakke) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாச்சிலாச்சிராமம் – திருவாசி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பாச்சிலாச்சிராமம் – திருவாசிவைத்தனன் தனக்கே

வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 1

அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே அமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறையிறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார். 2

உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்
உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற
செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தா மியாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்
இவரலா தில்லையோ பிரானார். 3

நாச்சில பேசி நமர்பிறர் என்று
நன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்
பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 4

வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை
வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
போகும்நாள் வீழும்நா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தா மியாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்
இவரலா தில்லையோ பிரானார். 5

செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
இவரலா தில்லையோ பிரானார். 6

கையது கபாலங் காடுறை வாழ்க்கை
கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார். 7

நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன்
நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங்
கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
இவரலா தில்லையோ பிரானார். 8

குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே
குற்றேவல் நாடொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 9

துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்
தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
மனத்தினாற் றொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 10

ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க் கடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
லாச்சிரா மத்தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலா தில்லையோ பிரானார். 11

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 12

திருச்சிற்றம்பலம்

Leave a Comment