vaasi theerave song lyrics tamil

வாசி தீரவே காசு நல்குவீர் (vaasi theerave song) பாடல் வரிகள்

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார்.

இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

– திருஞானசம்பந்தர்

 

திருத்தலங்கள் தோறும் யாத்திரையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர், திருவீழிமிழலையில் தங்கி இருந்து பெருமானை வணங்கிப் பல பதிகங்கள் பல அருளிச் செய்யலானார். அவரோடு திருநாவுக்கரசரும் உடன் இருந்து இறைவனை வணங்கி மகிழ்ந்தார். அக்காலத்தில் வான் மழை பொய்த்து, நிலம் வறண்டு, விளைச்சலும் குறைவுற்று வறுமையுண்டாயிற்று. மக்கள் பசித் துன்பத்தால் வருந்தினார்கள். சம்பந்தர் கனவில் ஈசன் தோன்றி, நிலவுலகத்தின் இயல்பால் வறுமை வந்தடைந்தாலும், தீமை பயக்கும் பசி நோய் சம்பந்தர் மற்றும் நாவுக்கரசரை வந்து அடையாது என்றும் ஆயினும் அவர்களைச் சார்ந்தோர் பசி நோயால் வருந்தாதவாறு பலிபீடத்தின் மீது தினமும் பொற்காசு ஒன்றினை அளிப்பதாகவும், அதன் வாயிலாக இத்துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என அருளினார். அப்பொற்காசைக் கொண்டு தடையின்றி திருவமுது தினமும் நடைபெற்றது. ஆனால் பொற்காசு மாற்றுக்குறைந்த தன்மையில் இருந்ததால் திருவமுது படைப்பது தினமும் தாமதமானது. மாசு நீங்கிய பொற்காசு அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டதே இப்பதிகம். தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

Vaasi theerave video song with lyrics in tamil

Leave a Comment