உற்றுமை சேர்வது பாடல் வரிகள் (urrumai cervatu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
உற்றுமை சேர்வது
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே. 1
சதிமிக வந்த சலந்தரனே
தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையால்
அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்ட விரும்பரனே
வேணு புரத்தை விரும்பரனே. 2
காதம ரத்திகழ் தோடினனே
கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே
பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே
சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே
புகலி யமர்ந்த பரம்பொருளே. 3
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே
மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே
வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே
புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே
விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே. 4
உடன்பயில் கின்றனன் மாதவனே
யுறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே
திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவரை செய்தனனே
பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே
தோணி புரத்துறை நஞ்சிவனே. 5
திகழ்கைய தும்புகை தங்கழலே
தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே
யிருந்தனு வோடெழில் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே
மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே
தக்கத ராயுறை சுந்தரரே. 6
ஓர்வரு கண்கள் இணைக்கயலே
உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே
யெழில்கொ ளுதாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே
நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே
சிரபுர மேயதி யம்பகனே. 7
ஈண்டு துயிலம ரப்பினனே
யிருங்கணி டந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே
திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே
மிகைத்தவ ரோடுந கைத்தலையே
பூண்டனர் சேரலு மாபதியே
புறவம் அமர்ந்த வுமாபதியே. 8
நின்மணி வாயது நீழலையே
நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே
யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே
கடல்விட முண்ட கருங்களனே
மன்னி வரைப்பதி சண்பையதே
வாரி வயன்மலி சண்பையதே. 9
இலங்கை யரக்கர் தமக்கிறையே
யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே
பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே
யெய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே
காழி யரனடி மாவசியே. 10
கண்ணிகழ் புண்டரி கத்தினனே
கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே
வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே
நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே
பசுமிக வூர்வர் பசுபதியே. 11
பருமதில் மதுரைமன் அவையெதிரே
பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே
வசையொடு மலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல் தருமருளே
கழுமலம் அமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே
வல்லவர் தம்மிடர் திடமொழியே.
திருச்சிற்றம்பலம்