உரித்தவன்காண் உரக்களிற்றை பாடல் வரிகள் (urittavankan urakkalirrai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்உரித்தவன்காண் உரக்களிற்றை

உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 1

நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 2

பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 3

பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 4

பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 5

ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 6

உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்
இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 7

தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்
தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 8

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 9

பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment