துணிவளர் திங்கள் பாடல் வரிகள் (tunivalar tinkal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாச்சிலாச்சிராமம் – திருவாசி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பாச்சிலாச்சிராமம் – திருவாசி
சுவாமி : மாற்றறிவரதர்
அம்பாள் : பாலசௌந்தரி

துணிவளர் திங்கள்

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே. 1

கலைபுனை மானுரி தோலுடை யாடை
கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனைவேலரோ ஏழையை வாட
இடர்செய்வ தோஇவ ரீடே. 2

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோஇவர் சீரே. 3

கனமலர்க் கொன்றை அலங்கல்இ லங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந்தழ காய
புநிதர்கொ லாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே. 4

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமொர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தைவி ழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வ தோஇவர் சார்வே. 5

நீறுமெய் பூசி நிறைசடை தாழ
நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி
யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வ தோஇவ ரீடே. 6

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்தழ காய
குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர்செய்வ தோஇவர் சார்வே. 7

ஏவலத் தால்விச யற்கருள் செய்து
இராவணனை1யீ டழித்து
மூவரி லும்முத லாய்நடுவாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர்க ளும்பர வும்மெழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோஇவர் சேர்வே.

பாடம் : 1 இராவணன் றன்னை 8

மேலது நான்முகன் எய்திய தில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்திய தில்லை
யெனஇவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோஇவர் பண்பே. 9

நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய வுட்கு நகையார்
உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய்வ தோஇவர் பொற்பே. 10

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந்தழ காய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
சாரகி லாவினை தானே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment