துளமதி யுடைமறி பாடல் வரிகள் (tulamati yutaimari) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வைகல்மாடக்கோவில் – திருவைகல் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : வைகல்மாடக்கோவில் – திருவைகல்
சுவாமி : வைகனாதேசுவரர்
அம்பாள் : வைகலம்பிகையம்மை

துளமதி யுடைமறி

துளமதி யுடைமறி
தோன்று கையினர்
இளமதி யணிசடை
எந்தை யாரிடம்
உளமதி யுடையவர்
வைக லோங்கிய
வளமதி தடவிய
மாடக் கோயிலே. 1

மெய்யகம் மிளிரும்வெண்
ணூலர் வேதியர்
மையகண் மலைமக
ளோடும் வைகிடம்
வையகம் மகிழ்தர
வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன்
செய்த கோயிலே. 2

கணியணி மலர்கொடு
காலை மாலையும்
பணியணி பவர்க்கருள்
செய்த பான்மையர்
தணியணி உமையொடு
தாமுந் தங்கிடம்
மணியணி கிளர்வைகல்
மாடக் கோயிலே. 3

கொம்பியல் கோதைமுன்
அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த
துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ்
வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க
ணான்செய் கோயிலே. 4

விடம்அடை மிடற்றினர்
வேத நாவினர்
மடமொழி மலைமக
ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில்
வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய
மாடக் கோயிலே. 5

நிறைபுனல் பிறையொடு
நிலவு நீள்சடை
இறையவ ருறைவிடம்
இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய்
வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன்
செய்த கோயிலே. 6

எரிசரம் வரிசிலை
வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த
செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில்
வைகல் மேற்றிசை
வருமுகி லணவிய
மாடக் கோயிலே. 7

மலையன இருபது
தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த
சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி
வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன
மாடக் கோயிலே. 8

மாலவன் மலரவன்
நேடி மால்கொள
மாலெரி யாகிய
வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை
வாணர் வைகலில்
மாலன மணியணி
மாடக் கோயிலே. 9

கடுவுடை வாயினர்
கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார்
பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில்
வைகல் மாநகர்
வடமலை யனையநன்
மாடக் கோயிலே. 10

மைந்தன திடம்வைகல்
மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி
சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு
பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ
லோகஞ் சேர்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment