Sivan Songs

திருந்த மதிசூடித் பாடல் வரிகள் | tirunta maticutit Thevaram song lyrics in tamil

திருந்த மதிசூடித் பாடல் வரிகள் (tirunta maticutit) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்குற்றாலம் – குறும்பலா தலம் பாண்டியநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : பாண்டியநாடு
தலம் : திருக்குற்றாலம் – குறும்பலா
சுவாமி : குறும்பலாநாதர்
அம்பாள் : குழல்வாய்மொழியம்மை

திருந்த மதிசூடித்

திருந்த மதிசூடித் தெண்ணீர்
சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற்
காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ்
சோலையின வண்டு யாழ்செய்
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ்
தண்சாரற் குறும்பலாவே. 1

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப்
பொடியணிந்த நம்பானம்மை
ஆட்பலவுந் தானுடைய அம்மா
னிடம்போலு மந்தண் சாரல்
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன்
மந்திபாய்ந் துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ
னுண்டுகளுங் குறும்பலாவே. 2

வாடல் தலைமாலை சூடிப்
புலித்தோல் வலித்து வீக்கி
ஆட லரவசைத்த அம்மா
னிடம்போலும் அந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத்
தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
கோடன் மணங்கமழும் குன்றிடஞ்சூழ்
தண்சாரற் குறும்பலாவே. 3

பால்வெண் மதிசூடிப் பாகத்தோர்
பெண்கலந்து பாடியாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா
ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்திறக்க
வண்டரற்றும் நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொ
டாட்டயருங் குறும்பலாவே. 4

தலைவாண் மதியங் கதிர்விரியத்
தண்புனலைத் தாங்கித் தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி
யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன்
கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந்
தேன்பிலிற்றுங் குறும்பலாவே. 5

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர்
தண்மதியர் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா
ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏன மிவையோ
டவைவிரவி யிழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக்
குயில்பயிலுங் குறும்பலாவே. 6

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை
மதியும் புனலுஞ் சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா
னிடம்போலும் பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி
மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத் தருவி யயலே
புனல்ததும்புங் குறும்பலாவே. 7

ஏந்து திணிதிண்டோள் இராவணனை
மால்வரைக்கீழ் அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த
சைவரிடம்போலுஞ் சாரற்சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து
மத்தகத்தில் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியுங் களிறு
முடன்வணங்குங் குறும்பலாவே. 8

அரவின் அணையானும் நான்முகனுங்
காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க்
கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ்
சண்பகமும் மலர்ந்துமாந்தக்
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ்
தண்சாரல் குறும்பலாவே. 9

மூடிய சீவரத்தர் முன்கூறுண்
டேறுதலும் பின்கூறுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா
ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன்
நீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள் கூய்விளியாக்
கைமறிக்குங் குறும்பலாவே. 10

கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா
மேவிய கொல்லேற்றண்ணல்
நம்பான் அடிபரவும் நான்மறையான்
ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார்
விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும்
நல்வினைகள் தளராவன்றே.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது: இதுவே திருக்குற்றாலம்.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment