திருத்தெள்ளேணம் பாடல் வரிகள்

திருத்தெள்ளேணம் (thiruthellenam thiruvasagam lyrics in tamil)

திருச்சிற்றம்பலம்

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 1

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 2

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 3

அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 4

அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ. 5

அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 6

ஆவா அரி அயன்இந்திரன் வானோர்க் கரியசிவன்
வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித் தாண்டு
கொண்டான்
பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 7

கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை
ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 8

கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 9

கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 10

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 11

முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 12

பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 13

மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால்
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 14

உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 15

புத்தன் புரந்தராதியர் அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 16

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 17

வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட் டுயிர்கெட்டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 18

விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 19

குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 20

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சிறப்பு: சிவனோடு அடைவு; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment