தேனெய் புரிந்துழல் செஞ்சடை பாடல் வரிகள் (teney purintulal cencatai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஅனேகதங்காவதம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஅனேகதங்காவதம் – காஞ்சிபுரம்தேனெய் புரிந்துழல் செஞ்சடை
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குல
வான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 1
கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 2
கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 3
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 4
பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 5
தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 6
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்
பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 7
புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 8
சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 9
வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே. 10
திருச்சிற்றம்பலம்