தழைகொள்சந் தும்மகி பாடல் வரிகள் (talaikolcan tum maki) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாகேச்சுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநாகேச்சுரம்
சுவாமி : சண்பகாரண்யேஸ்வரர்
அம்பாள் : குன்றமாமுலையம்மை

தழைகொள்சந் தும்மகி

தழைகொள்சந் தும்மகி லும்மயிற்
பீலியுஞ் சாதியின்
பழமும்உந் திப்புனல் பாய்பழங்
காவிரித் தென்கரை
நழுவில்வா னோர்தொழ நல்குசீர்
மல்குநா கேச்சரத்
தழகர்பா தந்தொழு தேத்தவல்
லார்க்கழ காகுமே. 1

பெண்ணொர்பா கம்மடை யச்சடை
யிற்புனல் பேணிய
வண்ணமா னபெரு மான்மரு
வும்மிடம் மண்ணுளார்
நண்ணிநா ளுந்தொழு தேத்திநன்
கெய்துநா கேச்சரம்
கண்ணினாற் காணவல் லாரவர்
கண்ணுடை யார்களே. 2

குறவர்கொல் லைப்புனங்
கொள்ளைகொண் டும்மணி குலவுநீர்
பறவையா லப்பரக் கும்பழங்
காவிரித் தென்கரை
நறவநா றும்பொழில் சூழ்ந்தழ
காயநா கேச்சரத்
திறைவர்பா தந்தொழு தேத்தவல்
லார்க்கிட ரில்லையே. 3

கூசநோக் காதுமுன் சொன்னபொய்
கொடுவினை குற்றமும்
நாசமாக் கும்மனத் தார்கள்வந்
தாடுநா கேச்சரம்
தேசமாக் கும்திருக் கோயிலாக்
கொண்டசெல் வன்கழல்
நேசமாக் குந்திறத் தார்அறத்
தார்நெறிப் பாலரே. 4

வம்புநா றும்மல ரும்மலைப்
பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வா ரிக்கொழிக்
கும்பழங் காவிரித் தென்கரை
நம்பன்நா ளும்அமர் கின்றநா
கேச்சரம் நண்ணுவார்
உம்பர்வா னோர்தொழச் சென்றுட
னாவதும் உண்மையே. 5

காளமே கந்நிறக் காலனோ
டந்தகன் கருடனும்
நீளமாய் நின்றெய்த காமனும்
பட்டன நினைவுறின்
நாளுநா தன்அமர் கின்றநா
கேச்சரம் நண்ணுவார்
கோளுநா ளுந்தீய வேனும்நன்
காங்குறிக் கொண்மினே. 6

வேயுதிர் முத்தொடு மத்தயா
னைமருப் பும்விராய்ப்
பாய்புனல் வந்தலைக் கும்பழங்
காவிரித் தென்கரை
நாயிறுந் திங்களுங் கூடிவந்
தாடுநா கேச்சரம்
மேயவன் றன்அடி போற்றியென்
பார்வினை வீடுமே. 7

இலங்கைவேந் தன்சிரம் பத்திரட்
டியெழில் தோள்களும்
மலங்கிவீ ழம்மலை யால்அடர்த்
தானிட மல்கிய
நலங்கொள்சிந் தையவர் நாடொறும்
நண்ணும்நா கேச்சரம்
வலங்கொள்சிந் தையுடை யார்இட
ராயின மாயுமே. 8

கரியமா லும்அய னும்மடி
யும்முடி காண்பொணா
எரியதா கிந்நிமிர்ந் தான்அம
ரும்மிட மீண்டுகா
விரியின்நீர் வந்தலைக் குங்கரை
மேவுநா கேச்சரம்
பிரிவிலா தவ்வடி யார்கள்வா
னிற்பிரி யார்களே. 9

தட்டிடுக் கியுறி தூக்கிய
கையினர் சாக்கியர்
கட்டுரைக் கும்மொழி கொள்ளலும்
வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட் கண்நட மாடிய
நாதன்நா கேச்சரம்
மட்டிருக் கும்மல ரிட்டடி
வீழ்வது வாய்மையே. 10

கந்தநா றும்புனற் காவிரித்
தென்கரை கண்ணுதல்
நந்திசே ருந்திரு நாகேச்ச
ரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நா விற்பனு வல்லிவை
பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீ சன்னிருக் கும்முல
கெய்தவல் லார்களே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment