பூவியல் புரிகுழல் பாடல் வரிகள் (puviyal purikulal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வலிவலம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : வலிவலம்
சுவாமி : இருதய கமலநாதேஸ்வரர்
அம்பாள் : அங்கயற்கண்ணி

பூவியல் புரிகுழல்

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1

இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 2

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே. 3

அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே. 4

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. 5

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. 6

நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே. 7

இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 8

தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே. 9

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. 10

மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment