Sivan Songs

புற்றில் வாளர வார்த்த பாடல் வரிகள் | purril valara vartta Thevaram song lyrics in tamil

புற்றில் வாளர வார்த்த பாடல் வரிகள் (purril valara vartta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோலக்கா – சீர்காழி(தென்பாதி) தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கோலக்கா – சீர்காழி(தென்பாதி)புற்றில் வாளர வார்த்த

புற்றில் வாளர வார்த்த பிரானைப்
பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 1

அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடை யானைத்
தழல்ம திச்சடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை
விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 2

பாட்ட கத்திசை யாகிநின் றானைப்
பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்ட கத்தேவர் செய்கையு ளானை
நட்ட மாடியை நம்பெரு மானைக்
காட்ட கத்துறு புலியுரி யானை
கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 3

ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 4

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
ஆள தாகஎன் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்
கொன்றி னான்றனை உம்பர் பிரானை
உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 5

காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்
கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை
நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 6

அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்
டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்
துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த
சோதி யைச்சுடர் போலொளி யானை
மின்ற யங்கிய இடைமட மங்கை
மேவும் ஈசனை வாசமா முடிமேற்
கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 7

நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 8

அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்
கன்றி ரங்கிய வென்றியி னானைப்
பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்
பரவி யும்பணி தற்கரி யானைச்
சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 9

கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப்
பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால்
நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற்
கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment