Sivan Songs

பொடிகொளுருவர் புலியினதளர் பாடல் வரிகள் | potikoluruvar puliyinatalar Thevaram song lyrics in tamil

பொடிகொளுருவர் புலியினதளர் பாடல் வரிகள் (potikoluruvar puliyinatalar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நொடித்தான்மலை – திருக்கயிலாயம் தலம் வடநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : வடநாடு
தலம் : நொடித்தான்மலை – திருக்கயிலாயம்
சுவாமி : கைலாயநாதர்

பொடிகொளுருவர் புலியினதளர்

பொடிகொளுருவர் புலியினதளர்
புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள் கொன்றை கலந்த
நீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல்
தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார்
கயிலை மலையாரே. 1

புரிகொள்சடையார் அடியர்க் கெளியார்
கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த
தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க
இருள்1 கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக்
கயிலை மலையாரே.

பாடம் : 1 மழுங்கியிருள் 2

மாவினுரிவை மங்கைவெருவ
மூடி முடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த
இறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர்
திரங்கல் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ்
கயிலை மலையாரே. 3

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட
முதல்வர் மதனன்றன்
தென்னீர்உருவம் அழியத்திருக்கண்
சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி
னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்தேடுங்
கயிலை மலையாரே. 4

ஒன்றும்பலவு மாயவேடத்
தொருவர்கழல் சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார்
கூடித் திரண்டெங்கும்
தென்றியிருளில்திகைத்த கரிதண்
சாரல் நெறியோடிக்
கன்றும் பிடியும் அடிவாரஞ்சேர்
கயிலை மலையாரே. 5

தாதார் கொன்றை
தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த
புனிதர் பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய்
அறநான் கருள்செய்த
காதார் குழையர் வேதத்திரளர்
கயிலை மலையாரே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே
லெரியொண் பகழியார்
எடுத்தான் திரள்தோள்
முடிகள்பத்தும்இடிய விரல்வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டாராளாக்
குறுகி வருங்கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலா லுதைத்தார்
கயிலை மலையாரே. 8

ஊணாப் பலிகொண் டுலகிலேற்றார்
இலகு மணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார்
புகழு மிருவர்தாம்
பேணாவோடி நேடஎங்கும்
பிறங்கும் எரியாகிக்
காணாவண்ணம் உயர்ந்தார் போலுங்
கயிலை மலையாரே. 9

விருதுபகரும் வெஞ்சொற்சமணர்
வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக் கொள்ளார்
புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்
தம்பால்இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார் போலுங்
கயிலை மலையாரே. 10

போரார்கடலிற் புனல்சூழ்காழிப்
புகழார் சம்பந்தன்
காரார் மேகங் குடிகொள் சாரற்
கயிலை மலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை
செப்பும் அடியார்மேல்
வாரா பிணிகள்
வானோருலகில் மருவுமனத்தாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment