பொடிகள்பூசிப் பலதொண்டர் பாடல் வரிகள் (potikalpucip palatontar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திலதைப்பதி – மதிமுத்தம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திலதைப்பதி – மதிமுத்தம்
சுவாமி : மதிமுத்தர்
அம்பாள் : பொற்கொடியம்மை

பொடிகள்பூசிப் பலதொண்டர்

பொடிகள்பூசிப் பலதொண்டர்
கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த
நின்றவ் வழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும்
விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங்
கமழும் மதிமுத்தமே. 1

தொண்டர் மிண்டிப் புகைவிம்மு
சாந்துங் கமழ்துணையலும்
கொண்டு கண்டார் குறிப்புணர
நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில்
சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற்றிசை பயிலுஞ்
சோலைம் மதிமுத்தமே. 2

அடலுளேறுய்த் துகந்தான்
அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக
வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி
சூழ்ந்த திலதைப்பதி
மடலுள் வாழைக் கனிதேன்
பிலிற்றும் மதிமுத்தமே. 3

கங்கை திங்கள் வன்னிதுன்
எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில்
வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில்
சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
தழகார் மதிமுத்தமே. 4

புரவியேழும் மணிபூண்
டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு
செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு
வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வல் மலருந்
திலதைம் மதிமுத்தமே. 5

விண்ணர்வேதம் விரித்தோத
வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற்
றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு
சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண
நின்றம் மதிமுத்தமே. 6

ஆறுசூடி யடையார்புரஞ்
செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க்கிட
மாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந்
தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில்
சூழ்ந்தம் மதிமுத்தமே. 7

கடுத்துவந்த கனல்மேனி
யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள்
அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை
புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந்
திலதைம் மதிமுத்தமே. 8

படங்கொள்நாகத் தணையானும்
பைந்தா மரையின்மிசை
இடங்கொள்நால்வே தனுமேத்த
நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைத்தொண்டர்
பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு
செய்யும் மதிமுத்தமே. 9

புத்தர்தேரர் பொறியில்
சமணர்கருவீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி
லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்
றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு
செய்யும் மதிமுத்தமே. 10

மந்தமாரும் பொழில்சூழ்
திலதைம் மதிமுத்தர்மேல்
கந்தமாருங் கடற்காழி
யுள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த
வல்லார்கள் போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி
சேர்வது திண்ணமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment