Sivan Songs

பொருப்பள்ளி வரைவில்லாப் பாடல் வரிகள் | poruppalli varaivillap Thevaram song lyrics in tamil

பொருப்பள்ளி வரைவில்லாப் பாடல் வரிகள் (poruppalli varaivillap) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஅடைவு தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : திருஅடைவுபொருப்பள்ளி வரைவில்லாப்

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே. 1

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே. 2

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே. 3

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே. 4

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே. 5

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே. 6

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே. 7

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்
அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி
இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே. 8

கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சைய மிக்க
வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே. 9

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே. 10

கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே. 11

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment