Pootharum Poigai Lyrics Tamil

15 திருத்தோணோக்கம் – Pootharum Poigai Lyrics Tamil

திருச்சிற்றம்பலம்

பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 1

என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 2

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 3

கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்
சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 4

நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 5

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ. 6

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 7

மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்
ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே
ஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம். 8

எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம். 9

பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 10

காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 11

பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 12

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 13

உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 14

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: பிரபஞ்ச சுத்தி; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.

Leave a Comment