பெருந்தகையைப் பெறற்கரிய பாடல் வரிகள் (peruntakaiyaip perarkariya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்செங்காட்டங்குடி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்செங்காட்டங்குடிபெருந்தகையைப் பெறற்கரிய

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 1

துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆரழலை அநங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 2

உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 3

கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 4

நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 5

கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 6

எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 7

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 8

அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை
அலைகடலில் ஆலால மமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 9

போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment