பெண்ணிய லுருவினர் பாடல் வரிகள் (penniya luruvinar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புறவம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புறவம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
பெண்ணிய லுருவினர்
பெண்ணிய லுருவினர் பெருகிய
புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர்
கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி
பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுக
ழொலிமலி புறவமே. 1
கொக்குடை இறகொடு பிறையொடு
குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமொர் அரவமு
மலரரை மிசையினில்
திக்குடை மருவிய வுருவினர்
திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர்
விரைகமழ் புறவமே. 2
கொங்கியல் சுரிகுழல் வரிவளை
யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர்
பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர்
விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன்
மிசையுயர் புறவமே. 3
மாதவ முடைமறை யவனுயிர்
கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற
வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை
உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர்
உறைபதி புறவமே. 4
காமனை யழல்கொள விழிசெய்து
கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு
வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய
வகைதனொ டொளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு
வழிபடு புறவமே. 5
சொன்னய முடையவர் சுருதிகள்
கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர்
திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு
ளினருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ்
பொழிலணி புறவமே. 6
வரிதரு புலியத ளுடையினர்
மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி
மிசையணி பெருமையர்
எரிதரு முருவினர் இமையவர்
தொழுவதொ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி
துறைபதி புறவமே. 7
வசிதரு முருவொடு மலர்தலை
யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி
யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிரல் நிறுவினர்
ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவர்
உறைபதி புறவமே. 8
தேனக மருவிய செறிதரு
முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர்
வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல்
நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி
யவர்பதி புறவமே. 9
கோசர நுகர்பவர் கொழுகிய
துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள்
பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு
நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுக
ழொலிமலி புறவமே. 10
போதியல் பொழிலணி புறவநன்
னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை
தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ
ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை
நிகழ்தரு பிறவியே.
திருச்சிற்றம்பலம்