படுகுழிப் பவ்வத் பாடல் வரிகள் (patukulip pavvat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை
படுகுழிப் பவ்வத்
படுகுழிப் பவ்வத் தன்ன
பண்டியைப் பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர்
மூர்க்கரே இவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 1
புழுப்பெய்த பண்டி தன்னைப்
புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்ப துவாய்
ஒற்றுமை யொன்று மில்லை
சழக்குடை இதனுள் ஐவர்
சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 2
பஞ்சின்மெல் லடியி னார்கள்
பாங்கரா யவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே
நாதனே நம்ப னேநான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
ஆரூர்மூ லட்ட னீரே. 3
கெண்டையந் தடங்கண் நல்லார்
தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர்
குலைத்திடர்க் குழியில் நூக்கக்
கண்டுநான் தரிக்க கில்லேன்
காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்டவா னவர்கள் போற்றும்
ஆரூர்மூ லட்ட னீரே. 4
தாழ்குழல் இன்சொல் நல்லார்
தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளும்
என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும்
வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப் படுக்க வாற்றேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 5
மாற்றமொன் றருள கில்லீர்
மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்
சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போல் ஐவர் வந்து
குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லேன் நாயேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 6
உயிர்நிலை யுடம்பே காலா
உள்ளமே தாழி யாகத்
துயரமே ஏற்ற மாகத்
துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப்
பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க் காற்றேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 7
கற்றதேல் ஒன்று மில்லை
காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம்
பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து
முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன்
ஆரூர்மூ லட்ட னீரே. 8
பத்தனாய் வாழ மாட்டேன்
பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய
செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல
மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே
ஆரூர்மூ லட்ட னீரே. 9
தடக்கைநா லைந்துங் கொண்டு
தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி
இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளும்
முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே
ஆரூர்மூ லட்ட னீரே.
திருச்சிற்றம்பலம்