பாடன்மறை சூடன்மதி பாடல் வரிகள் (patanmarai cutanmati) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பட்டீச்சுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : பட்டீச்சுரம்
சுவாமி : பட்டீச்சரநாதர்
அம்பாள் : பல்வளைநாயகியம்மை
பாடன்மறை சூடன்மதி
பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடுமவரே. 1
நீரின்மலி புன்சடையர் நீளரவு
கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை
கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
மேத்தவினை பற்றழியுமே. 2
காலைமட வார்கள்புன லாடுவது
கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறுபழை யாறைமழ
பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை
பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி
விண்ணுலகம் ஆளுமவரே. 3
கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக
மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி
பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட
னாதலது மேவலெளிதே. 4
மருவமுழ வதிரமழ பாடிமலி
மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை
யாரையடை யாவினைகளே. 5
மறையின்ஒலி கீதமொடு பாடுவன
பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர்
பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை
யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர்
தீத்தொழில்கள் இல்லர்மிகவே. 6
பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை
யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி
பாடுமற வாதவவரே. 7
நேசமிகு தோள்வலவ னாகியிறை
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண
ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி
தாம்அமரர் விண்ணுலகமே. 8
தூயமல ரானும்நெடி யானும்அறி
யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி
வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத
னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி
தாகுநல மேலுலகமே. 9
தடுக்கினையி டுக்கிமட வார்களிடு
பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி
காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர
மேத்தவினை பற்றறுதலே. 10
மந்தமலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி
ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்