பந்துசேர்விர லாள்பவ ளத்துவர் பாடல் வரிகள் (pantucervira lalpava lattuvar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பூந்தராய் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பூந்தராய் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்

பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
வாயினாள்பனி மாமதி போல்முகத்
தந்தமில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்திசெய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே. 1

காவியங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டை வாய்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவியம்பெடை யன்ன நடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே. 2

பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
செய்யெலாங்கழு நீர்கம லம்மலர்த்
தேறலூறலின் சேறுல ராதநற்
பொய்யிலாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே. 3

முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
மேவினார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளினந்துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே. 4

பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
நீலமல்கிய காமரு வாவிநற்
புண்ணியருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே. 5

வாள்நிலாமதி போல்நு தலாள்மட
மாழை யொண்கணாள் வண்தர ளந்நகை
பாண்நிலாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடுஞ்
சேண்நிலாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல்
சேர்வதுசிக ரப்பெருங் கோயிற்சூழ்
போணிலாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 6

காருலாவிய வார்குழ லாள்கயற்
கண்ணினாள்புயற் காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னி யன்மன்னி
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி
போருலாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 7

காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத்
தேசுசேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
தீசன்மேவும் இருங்கயி லையெடுத்
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 8

கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வைவாய்க்கொடி யேரிடையாளுமை
பங்குசேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
மயங்கநீண்டவர் வான்மிசைவந்தெழு
பொங்குநீரின்மி தந்தநற் பூந்தராய் போற்றுதுமே. 9

கலவமாமயி லார்இயலாள்கரும்
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழ லாளுமை கூறனை வேறுரையால்
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
புலவர்தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே. 10

தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ்சேலன
கண்ணியோ டண்ணல் சேர்விடந் தேன்அமர்
பூம்பொழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமென்
றோம்புதன்மையன் முத்தமிழ்நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்தமிழ் மாலைகொண்
டாம்படியிவை யேத்தவல் லார்க்கடை யாவினையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment