பல்லடைந்த வெண்டலையிற் பாடல் வரிகள் (pallatainta ventalaiyir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சிரபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருச்சிரபுரம் – சீர்காழி
சுவாமி : தோணியப்பர்
அம்பாள் : திருநிலைநாயகி

பல்லடைந்த வெண்டலையிற்

பல்லடைந்த வெண்டலையிற்
பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள்
மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ
டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ்
சிரபுரம் மேயவனே. 1

கொல்லைமுல்லை நகையினாளோர்
கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும்
ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர்
தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு
சிரபுரம் மேயவனே. 2

நீரடைந்த சடையின்மேலோர்
நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி
யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து
காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு
சிரபுரம் மேயவனே. 3

கையடைந்த மானினோடு
காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு
மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச்
செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த
சிரபுரம் மேயவனே. 4

புரம்எரித்த பெற்றியோடும்
போர்மத யானைதன்னைக்
கரம்எடுத்துத் தோலுரித்த
காரணம் ஆவதென்னே
மரம்உரித்த தோலுடுத்த
மாதவர் தேவரோடுஞ்
சிரம்எடுத்த கைகள்கூப்புஞ்
சிரபுரம் மேயவனே. 5

கண்ணுமூன்றும் உடையதன்றிக்
கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு
பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலும்ஓம்பி
யெழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர்
சிரபுரம் மேயவனே. 6

குறைபடாத வேட்கையோடு
கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு
மெய்ம்மை1 யென்னே
இறைபடாத மென்முலையார்
மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு
சிரபுரம் மேயவனே.

பாடம் : 1 மேன்மை 7

மலையெடுத்த வாளரக்கன்
அஞ்ச வொருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே
நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார்
மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே
சிரபுரம் மேயவனே. 8

மாலினோடு மலரினானும்
வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட
தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள்
நம்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த
சிரபுரம் மேயவனே. 9

புத்தரோடு சமணர்சொற்கள்
புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து
மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச்
சிரபுரம் மேயவனே. 10

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த
சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல
அணிகொள்சம் பந்தன்உரை
பங்கம்நீங்கப் பாடவல்ல
பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர்
தன்மையி னாலவரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment