பாளையு டைக்கமு பாடல் வரிகள் (palaiyu taikkamu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கோயில் – சிதம்பரம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கோயில் – சிதம்பரம்
சுவாமி : மூலத்தானநாதர், சபாநாயகர்
அம்பாள் : சிவகாமியம்மை

பாளையு டைக்கமு

பாளையு டைக்கமு கோங்கிப்பன்
மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி
வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப
லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்
பேய்த்தொண்டர் காண்பதென்னே. 1

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய
மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம
ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 2

தொடுத்த மலரொடு தூபமுஞ்
சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 3

வைச்ச பொருள்நமக் காகுமென்
றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை
யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே. 4

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே. 5

ஊனத்தை நீக்கி உலகறிய
என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச்
சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை
யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே. 6

தெரித்த கணையாற் திரிபுர
மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர்
கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 7

சுற்று மமரர் சுரபதி
நின்திருப் பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழைப்பப்
பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனைத் தீவிழித்
தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 8

சித்தத் தெழுந்த செழுங்கம
லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்
தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 9

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப
மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
கண்கொண்டு காண்பதென்னே.

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment